1

Link: https://www.tamilwin.com/community/01/207869?ref=home-feed

தமிழர்களுக்கு அமெரிக்காவின் உதவி தேவை: யாழில் போராட்டம்

காணாமல்போன தமிழர்களை கண்டுபிடிப்பதற்கு அமெரிக்காவின் உதவி தேவையென வலியுறுத்தி யாழில் போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் நல்லூர் ஆலயத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இதன்போது கையெழுத்து திரட்டும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

காணாமல்போன உறவுகளால் அமெரிக்க தூதரகத்தில் கையளிப்பதற்கான அறிக்கையொன்று இன்று வெளியிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில்,

கையொப்பங்களை இட்ட தமிழர்கள் ஆகிய நாம், 19,000 காணாமல்போன தமிழர்களை கண்டுபிடிப்பதற்கும், 146,000 கொல்லப்பட்ட தமிழர்கள், 80,000 விதவைகள் மற்றும் 50,000 அனாதைகள் ஆகியோரின் உறவினர்களுக்கும் நீதி கிடைக்க அமெரிக்காவின் உதவியை நாடுகிறோம்.

உங்கள் அரசாங்கம் ஒரு அரசியல் தீர்வை அங்கீகரிக்கவும் செயல்படுத்தவும் வேண்டுமென வேண்டுகோள் விடுத்து, நாட்டின் வடகிழக்கில் இருந்து இலங்கை இராணுவத்தை விரைவில் அகற்றவும், அதன் கொடூரமான மனித உரிமை மீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், தமிழர்கள் அவசரமாக விரும்புவதை செயற்படுத்த வேண்டும் என்று வேண்டுகிறோம்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதற்கான அதன் தீர்மானத்திற்கு அமெரிக்காவுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்.

அத்துடன் ஹைய்ட்டியில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு இலங்கை ஐ.நா அமைதி காப்பாளர்களை தண்டிப்பதற்கு முன்னாள் ஐக்கிய நாடுகள் சபை தூதர் நிக்கி ஹேலியின் வேண்டுகோளுக்கும் எமது நன்றிகள்.

1813 இல் அமெரிக்கர் ரெவ். சாமுவல் நியூல் யாழ்ப்பாணத்திற்கு வந்தார். தமிழ் தாயகங்களில் 130 பள்ளிகளை கட்டியெழுப்பினார். அப்பள்ளிகளில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் கல்வியூற்றபட்டது.

யாழ்ப்பாணத்திற்கு ரெவ். சாமுவல் நியூல் பின்பற்றி பல அமெரிக்கர்கள் வந்து சேர்ந்துள்ளார். இவர்கள் பல ஆஸ்பத்திரிகள் கட்டி எழுப்பினார்கள்.இந்த பாடசாலைகள் மற்றும் ஆஸ்பத்திரிகள் இன்னும் வட – கிழக்கில் உள்ள தமிழர்களுக்கு சேவை செய்கின்றன. பாடசாலைகள் கல்வி பயின்ற பலர் அறிஞர்கள் ஆனார்கள்.

அமெரிக்காவுடன் எங்கள் உறவுகள் எப்படி இருந்திருந்ததை , கடந்த காலத்தில் அமெரிக்கர்களின் இந்த உதவி காட்டுகிறது. உதாரணமாக, 1812 ஆம் ஆண்டு கொழும்பு வந்த அமெரிக்கர்களை ஆங்கிலேயர்கள் துரத்திய போது தமிழர்கள் யாழ்ப்பாணத்திற்கு அமெரிக்கர்களை வரவேற்றனர்

தமிழர்கள் எங்கள் அடையாளத்தையும் எங்கள் நிலத்தையும் இழந்துவருகிறோம். இதனால் தமிழ் மக்களுக்கு விரைவில் அதிக உதவிகள் தேவை. சிங்கள அரசாங்கமானது சீனாவிலிருந்து அதிக அளவில் பணம் கடன் எடுத்ததால் , சிங்களம் கடனை திரும்பிக் கொடுப்பதற்கு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை போன்ற வளமான நிலத்தினை 99 வருட குத்தகைகளை வழங்கியுளார்கள். இது ஏழை நாடுகளுடன் சீனாவின் பொதுவான நடைமுறையாகும்.

சீனாவின் கடனை கொடுப்பதற்கு தமிழரின் வளம் கூடிய துறைமுகங்கள் , பலாலி விமான நிலையம், அல்லது ஒன்பது தீவுகளில் சில தீவுகளை கொடுக்கலாம். இது தமிழர்களின் கலாச்சாரம், நமது மொழி மற்றும் வாழ்க்கை முறையை மாற்றிவிடும். இது பொருளாதாரம் என்ற பெயரில் இனப்படுகொலை ஆகும்.

எவ்வாறெனினும், உலகெங்கிலும் உள்ள அமெரிக்க சர்வதேச கொள்கை மற்றும் அதன் மனித உரிமைகள் செயற்பாடுகளில் தமிழ் மக்கள் மிக நம்பிக்கை கொண்டுள்ளனர்.

அமெரிக்கா மற்றும் அதன் குடிமக்கள் போர் மற்றும் இனப்படுகொலைக்கு பாதிக்கப்பட்டவர்களுடன் அனுதாபமும் ஆதரவையும் கொடுப்பவர்கள். அமெரிக்கா தமிழர்கள் போன்று ஒடுக்கப்படட மக்களுக்குக்காக தென் சூடான், போஸ்னியா, கிழக்கு திமோர் போன்ற நாடுகளை ஒடுக்கப்பட்டவர்களிடமிருந்து அவர்களை விடுவித்தவர்கள்.

இங்குள்ள அநீதி இவைகள் என்னவென்பதையும், ஸ்ரீலங்கா படுகொலைகளையும் இனப்படுகொலைகளையும் தவிர்ப்பதற்கு அரசியல் கட்டமைப்பை ஸ்தாபிப்பதற்கு எங்களுக்கு உதவவும் அமெரிக்காவை கேட்டுக் கொள்கிறோம்.

அமெரிக்கா செய்யும் உதவிக்கு பிரதியுபகாரமாக , தமிழர்கள் வட-கிழக்கு அபிவிருத்திக்கு ஒரு பொது இலக்கின் ஒரு பகுதியாக அமெரிக்க அரசாங்கத்துடன் எந்தவொரு வளத்தையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். பொருளாதாரம், உயர் தொழில்நுட்பம், கல்வி, நகர நிர்மாணம், மற்றும் அரசியலமைப்பை உருவாக்குவது ஆகியவற்றில் அமெரிக்காவின் ஆதரவை கேற்கிறோம் .

நாம் சுதந்திரத்துடன், சமாதானமாகவும் வாழ விரும்புகிறோம். 200 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டனில் இருந்து சுதந்திரம் மற்றும் இரண்டாம் உலகப்போரில் ஜேர்மன் மற்றும் ஜப்பானிய கொடுங்கோன்மைக்கு எதிரான அதன் வெற்றிக்கு வழிவகுத்த அமெரிக்க துணிவுக்கு நாங்கள் மரியாதை செலுத்துகிறோம்.

தமிழ் மக்களுக்கு உதவ வடகிழக்கு இலங்கையில் தலையிட அமெரிக்க அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது காணாமல்போன உறவுகளால் துண்டு பிரசுரம் சில விநியோகிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

2