நாள் 1446
சுதந்திரதின நாளில் அரசின் ஜனநாயக விரோதப் போக்குகளுக்கு கடும் கண்டனம்!:காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார்
நாங்கள் சிறிலங்கா அரசின் ஜனநாயகப் போக்குகளை வன்மையாக கண்டிப்பதுடன் சிறிலங்காவின் சுதந்திர தினத்தை தமிழர்கள் ஆகிய நாங்கள் எமது மரபுவழிப் பண்பாட்டு, வரலாற்று ரீதியாக இம்முறையும் கரிநாளாகவே கடைப்பிடிக்கின்றோம் என தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
சிறிலங்காவின் 73 ஆவது சுதந்திர தினம் இன்றாகும்(04) தமிழ்மக்களுக்கோ இந்நாள் கரி நாள்! துக்க நாள்!
தமிழ்மக்களையும் ஒரு தேசிய இனமாக கருதி சமவாய்ப்பு, சம அந்தஸ்து தராமல், மொழி உரிமை, தொழில் உரிமை, கல்வி உரிமை, வழிபாட்டு உரிமை, வாழ்வுரிமை இவற்றைப் பறித்து, இனத்துவ அடிப்படையில் கலவரங்களையும், தாக்குதல்களையும், சித்திரவதைகளையும், படுகொலைகளையும் சிங்களப் பெருந் தேசிய வாதம் நிகழ்த்தி உடல்- உளக் காயங்களையும், சொத்தழிவுகளையும் நடத்தியபடியினால் தான் தமிழ்த்தேசிய இனம் தமக்கு என்று ஒரு பாதுகாப்பான வாழ்க்கை, சுயமரியாதை, சுயகௌரவம் கருதி ஒரு தேசமாக சிந்தித்து ஒரு ஆயுதப் போராட்டத்துக்கான தேவை எழுந்தது.
தமிழ்மக்களின் விடுதலைப் போராட்டத்தை சிறிலங்கா அரசு தமிழ் இனப் படுகொலையில் கொண்டு சென்று முடித்திருந்தாலும் தமிழ்மக்கள் ஒரு தேசம் ஒரு தேசிய இனமாக இப்போதும் கருதுகிறார்கள் என்பதில் நாங்கள் பெருமையும், மகிழ்ச்சியும் அடைகின்றோம்.
சிங்களப் பெருந்தேசியவாத ஒடுக்குமுறைகளுக்கு எதிராகத் தமிழ்மக்கள் அறவழிப் போராட்டங்களை நடத்தித் தமது அரசியல் அபிலாசைகள், விருப்பு வெறுப்புக்களை வெளிப்படுத்துவதைத் தடுப்பதற்காக சிறிலங்கா அரசு நீதி பரிபாலனக் கட்டமைப்பைக் கூட ஒரு ஒடுக்குமுறைக் கருவியாக பாவித்து வருவதையே அண்மைக்கால நீதிமன்றத் தடை உத்தரவுகள் காட்டுகின்றன.
சிறிலங்கா அரசானது பல தரப்பட்ட அரசாங்கத் திணைக்களங்களையும் காலம் காலமாகப் பல்வேறு வடிவங்களில் ஒடுக்குமுறைக் கருவியாகப் பயன்படுத்தியே வந்திருக்கிறது.
மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை, சுற்றுச்சூழல் சுற்றாடல் அதிகார சபை, வனவளப் பாதுகாப்புத் திணைக்களம், கனியவளங்கள் திணைக்களம், சுவடிகள் மரபுரிமைத் திணைக்களம், தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக்களம், சுற்றுலா அதிகார சபை, வனவிலங்குகள் பறவைகள் சரணாலயப் பாதுகாப்பு அதிகார சபை இப்படிப்பட்ட பெயர்களில் தமிழ்மக்களுக்கு எதிரான நில அபகரிப்புக்கள், ஆக்கிரமிப்புக்கள், அத்துமீறல்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. கட்டமைப்புச் சார் இனப்படுகொலையை இவ்வாறான பச்சை ஆக்கிரமிப்புக்கள் ஊடாக சிறிலங்கா அரசு செய்கிறது. இதில் தற்போது நீதி பரிபாலனக் கட்டமைப்பும் உட்புகுத்தப்பட்டுள்ளது.
சிறிலங்கா அரசாலும், அதன் துணை ஆயுதக் குழுக்களாலும் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நடந்தது? என்ற உண்மை நிலையைக் கண்டறியவும், நீதி மற்றும் பொறுப்புக் கூறலை வலியுறுத்தியும் 1448 நாட்களாக வீதி ஓரத்திலிருந்து போராடும் தாய்மார்களை வன்மமாகப் பார்ப்பதும், காலம் கடத்திக் கடத்திச் சாட்சியங்களான இவர்களை முதுமைக்கால நோய்களால் இறக்க விடுவதும் மிகவும் மோசமான அடிப்படை மனித உரிமை மீறல்கள் ஆகும். சிங்கள பெளத்த பேரினவாதத்தின் உச்சப்பட்ச ஒடுக்குமுறை வடிவங்களில் இதுவும் ஒன்றாகும்.
அத்துடன் சமரசம் அற்ற, விலை போகாத உன்னதமான தமிழீழ விடுதலைப் போராட்ட கொள்கை கோட்பாட்டு தத்துவத்தின் அடிப்படையில் எவராலும் நீர்த்துப் போகச் செய்யப்பட முடியாத தாயகம் – தேசியம் – சுயநிர்ணயம் கோரிக்கைகளைத் தொடர்ச்சியாக வலியுறுத்தி எத்தனை தடை வரினும் ஓயாத அலையாக தமிழ்த்தேசிய இனம் சுழன்றடித்து தமது விடுதலைக்காகப் போராடும் என்பதையும் இந்நாளில் சிங்கள நாட்டின் ஆட்சியாளர்களுக்கு முரசறைந்து அறிவித்துப் பிரகடனம் செய்கின்றோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.